பெண் பத்திரிகையாளர் மீது இனவெறி தாக்குதல்: சிக்கலில் உபேர்!
மும்பையில் பத்திரிகையாளராக பணியாற்றி வரும் பெண்ணை, உபர் காரில் சக பயணி இன வெறித் தாக்குதலுக்கு உட்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர், ‘உர்மி எஸ்டேட் அருகில் என்னுடன் பயணித்த அந்தப் பெண் என்னை ‘சின்க்கி’ என்றும் ‘சின்க்கி ஷிட்’ என்றும் திட்டினார். அதற்கு நான், ‘நீங்கள் சொல்வது இனவெறி மிகுந்த சொல்’ என்று சொன்னேன்.
அதை அவர் மதிக்காமல் தொடர்ந்து தூற்றவும் தாக்கவும் செய்தார். அவரை உடனே ஒரு போட்டோ எடுக்க முயன்றேன். ஆனால், மொபைலை பிடுங்கிவிட்டு, உடைத்து விடுவதாக அச்சம் மூட்டினார். காரில் இருந்து இறங்குவதற்கு முன்னர் அவர் என் தலை முடியின் ஒரு பகுதியை பிடுங்கினார்.
யாரென்று தெரியாத நபரால் பட்டப் பகலில் நான் தாக்குதலுக்கு உள்ளானேன். உடல் ரீதியாக நான் தாக்குதலுக்கு உள்ளானேன். உளவியல் ரீதியாக நான் அச்சமடைந்துள்ளேன். ஒரு நாளைக்கு இரண்டு முறை நான் உபர் காரில் பயணம் செய்து வருபவள். இனி, என்னால் பாதுகாப்பாக பயணம் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இல்லை’ என்றார்.
தொடர்ந்து, ‘என்னைத் தாக்கிய பெண்ணைப் பற்றிய தகவல்களை நான் உபர் நிறுவனத்திடம் கேட்ட போது, ‘வாடிக்கையாளரின் ப்ரைவசி’-யை வெளியில் சொல்ல முடியாது என்று நிராகரித்து விட்டது உபர்.
போலீஸில் புகார் கொடுத்த பின்னர், அவர்கள் உபர் நிறுவனத்திடம் கேட்ட போதும், அந்தப் பெண்ணின் தகவல்களை தர முடியாது என்று கூறிவிட்டது’ என்று அதிர்ச்சியளிக்கும் தகவலை பதிவிட்டுள்ளார்.