சைபர் கிரைம் பிரிவை பலப்படுத்த ரூ.10 கோடி!

சைபர் கிரைம் பிரிவை பலப்படுத்த 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஜாக்டோ - ஜியோ போராட்டத்திற்கு எதிரான வழக்கில் நீதிபதி கிருபாகரன் கூறிய கருத்துக்களை சமூக வலைதளங்களில் விமர்சித்து பேசியது தொடர்பான வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் நர்மதா சம்பத், "சைபர் கிரைம் பிரிவை பலப்படுத்த 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான முன்னேற்றங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய 10 நாட்கள் அவகாசம் வேண்டும்" என கோரிக்கை வைத்தார்.

சைபர் குற்றங்களால் நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறிய நீதிபதி, "ஒவ்வொரு நாளும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றபடி சைபர் கிரைம் பிரிவுக்கு நிபுணர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்" என்றார்.

சைபர் கிரைம் பிரிவில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகள், நிபுணர்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜூன் 28-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

More News >>