அணை பாதுகாப்பு... நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்!

மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவிற்கு எதிராக வரும் மழைக்கால கூட்டத்தொடரில் குரல் எழுப்புவோம் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

மாநிலங்களின் உரிமையை பறிப்பதாகக் கூறி மத்திய அரசு கொண்டு வரவுள்ள அணை பாதுகாப்பு மசோதாவிற்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.

இந்த மசோதாவை கொண்டு வர மாநில அரசுகளிடம் கருத்து கேட்க வேண்டும் என்பதே ஒரு மித்த கோரிக்கையாகும். ஆனால், மத்திய அரசு அணை பாதுகாப்பு மசோதாவை கொண்டு வருவதில் தீவிரம் காட்டி வருகிறது.

இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, "அணை பாதுகாப்பு மசோதா பற்றி பிரதமரை சந்திக்கும் போது வலியுறுத்தப்படும். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் குரல் கொடுப்போம். இந்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தால் அதிமுக எதிர்க்கும்." என்றார்.

மேலும், "தமிழக நலனை காக்க காவிரி பிரச்சனையில் போராடி வெற்றி பெற்றதுபோல் அணை பாதுகாப்பு சட்டம் வரும்போது எதிர்ப்போம். கவர்னரின் செயல்பாடுகள் குறித்து கருத்து சொல்லவதற்கு தயாராக இல்லை." என தம்பிதுரை கூறினார்.

More News >>