நீதிமன்றத்தில் கைது நடவடிக்கை.. காவல் துறை மீது அவமதிப்பு வழக்கு

நீதிமன்ற அறைக்குள் நுழைந்து கைது செய்த கோவை போலீசாருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன் வந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.

திருப்பூர் மாவட்டம், சிங்காநல்லூரில் கொலை வழக்கில் தேடப்பட்ட சந்தோஷ் என்பவர், கடந்த ஏப்ரல் 10-ம் தேதி திருப்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அப்போது சிங்காநல்லூர் காவல் நிலைய காவலர்கள், நீதிமன்ற அறைக்குள் நுழைந்து, சந்தோஷை கைது செய்தனர்.

இதுசம்பந்தமாக திருப்பூர் நீதிமன்ற நீதிபதி அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு, சிங்காநல்லூர் காவல் ஆய்வாளர் முனீஸ்வரன், தலைமை காவலர் ராபர்ட், ஓட்டுநர் வேலன் ஆகியோர் மீது தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

காவல்துறையினரின் செயலுக்கு அதிருப்தி தெரிவித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நாம் சுதந்திர நாட்டில் தான் வாழ்கின்றோமா? என்ற கேள்வி எழுப்பினார்.

“இது போன்ற செயல்களை ஒரு போதும் சகித்து கொள்ள முடியாது. நீதிமன்ற அறைக்குள் சென்று யாரையும் கைது செய்யக்கூடாது என்பது கூட காவலர்களுக்கு தெரியவில்லை. இந்த விவகாரத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. சம்மந்தப்பட்ட காவலர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது?” என தலைமை நீதிபதி கேட்டார்.

பின்னர், இதுசம்பந்தமாக ஜூலை 2-ம் தேதி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

More News >>