ஒக்கி புயலால் பாதித்தவர்களை ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல்

கன்னியாகுமரி: ஒக்கி புயலால் பாதித்தவர்களை இன்று நேரில் சந்தித்த ராகுல் காந்தி, ஆட்சியில் இல்லாவிட்டாலும் மீனவர்களுக்காக குரல் கொடுப்போம் என ஆறுதல் தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 30ம் தேதி ஒக்கி என்ற புயல் பயங்கரமாக வீசி பேரிழப்பை ஏற்படுத்தியது. இந்த புயலால், பொருளிழப்பு மட்டுமின்றி, மீன் பிடிக்க சென்ற மீனவர்களின் உயிரிழப்பும் ஏற்பட்டது. காணாமல் போன மீனவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களை முதல்வர் உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்த ஆறுதல் கூறி வருகின்றனர்.அந்த வகையில், அகில இந்திய காங்கிரஸ் தலைவராக நாளை மறுநாள் பொறுப்பேற்க உள்ள ராகுல் காந்தி இன்று காலை டெல்லியில் இருந்து புறப்பட்டு, கேரள வந்தார். அங்கு, புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர், அங்கிருந்து 1 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் குமரி மாவட்டம் வந்தார். அங்கிருந்து, சின்னத்துறை மீனவ கிராமத்திற்கு சென்ற ராகுல் காந்தி கடலுக்கு சென்று இதுவரை கரை திரும்பாத மீனவர்கள் மற்றும் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினர், விவசாயிகள் உள்ளிட்டோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் ராகுல் காந்தி கூறியதாவது:

மிகுந்த துக்கத்தோடு இங்கே வருகை தந்துள்ளேன். மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பின் வலியை அறிய முடிகிறது. குஜராத் தேர்தலால் கன்னியாகுமரிக்கு வர இயலவில்லை. தாமதத்திற்கு மன்னிக்கவும். மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லை என்றாலும் அவர்களிடம் உங்களுக்காக குரல் கொடுப்போம். மீனவர்களுக்கென தனி அமைச்சகம் இருந்திருந்தால் உங்களது பிரச்னை தீர்க்கப்பட்டிருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

More News >>