கலப்பு திருமணம்... கொடூர தண்டனை கொடுத்த கட்டப்பஞ்சாயத்து!
ஓசூர் அருகே கலப்பு திருமணம் செய்து கொண்ட மணமகன் குடும்பத்தினருக்கு ஊர் பஞ்சாயத்தில் கொடூர தண்டனைகள் வழங்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓசூர் அருகே உள்ள ஜோகிர் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்துரு. இவர் அதே கிராமத்தில் வேறு சமூகத்தை சேர்ந்த தேவயாணி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
இதன் காரணமாக ஊர் பஞ்சாயத்தில் சந்துருவின் வீட்டாருக்கு 3 லட்சம் ரூபாய் அபராதமும், தேவயாணி வீட்டாருக்கு 50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. சந்துரு ஏழை குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால், அவரால் அபராத தொகையை செலுத்த முடியவில்லை.
இதனால் அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்த கட்டப்பஞ்சாயத்து கும்பல், வீட்டை சுற்றிலும் கம்பி வேலி அமைத்து, வெளியே செல்ல முடியாதவாறு செய்துள்ளனர்.
சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முள்வேலிகளை அகற்றினர். இது தொடர்பாக 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் பிரபல எழுத்தாளர் சு.சமுத்திரத்தின் ஒரு கோட்டுக்கு வெளியே நாவலை நினைவுபடுத்துகின்றது.