நான் ஒன்றும் ஏமாற்றுக்காரன் இல்லை- விஜய் மல்லையா ட்வீட்!

”நான் ஏமாற்றுக்காரனும் இல்லை தப்பி ஓடியவனும் இல்லை” என விஜய் மல்லையா கொந்தளிப்புடன் ட்விட்டரில் விளக்கமளித்துள்ளார்.

விஜய் மல்லையா இந்தியாவைச் சேர்ந்த சுமார் 13 வங்கிகளில் 9,000 கோடி கடன் பெற்று அதைத் திரும்ப செலுத்தாமல் மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. அவரைப் இந்திய அதிகாரிகள் பிடித்து விசாரிப்பதற்கு முன்னர் இங்கிலாந்துக்கு தப்பியோடினார்.

அங்கிருந்து அவரை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு வர, அரசு தரப்பு தொடர்ந்து முயன்று வருகிறது. ஆனால், இதுவரை அது நடக்கவில்லை. இந்நிலையில் 9,000 கோடி கடனை திரும்பவும் செலுத்தாததால் உலகம் முழுவதும் இருக்கும் அவரின் சொத்துகளை முடக்க வழக்கு தொடர்ந்தன வங்கிகள்.

இதை எதிர்த்து இங்கிலாந்து நீதிமன்றத்தில் வாதாடியது மல்லையா தரப்பு. ஆனால், கடந்த மாதம் 8 ஆம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், '13 வங்கிகள் மல்லையாவின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுத்துள்ளதைத் தடுக்க முடியாது' என்று உத்தரவிட்டது.

இதையடுத்து, பொதுத்துறை வங்கிகளில் பெற்ற கடனை திரும்ப செலுத்த தயார் என்றும் கடனைத் திரும்ப செலுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்றும் மல்லையா தெரிவித்திருந்தார்.

தற்போது மல்லையா தன் ட்விட்டர் பக்கத்தில் ‘நான் யாரையும் ஏமாற்றப் பார்க்கவில்லை. நீதிமன்ற முன்னிலையில், நான் பெற்ற கடன்களை திரும்ப செலுத்தவும் ஒப்புக் கொண்டுள்ளேன். ஆனால், என்னை சமீபத்தில் பொருளாதாரத்தை சீர்குழைத்துத் தப்பியோடியவன் என்று குற்றம் சுமத்தியுள்ளனர். அதை ஏற்றுக் கொள்ள முடியாது. நீதியின் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது’ என்று கொதித்துள்ளார். 

More News >>