கொட்டாவி விட்ட மாணவருக்கு அடி: தலைமை ஆசிரியை மீது வழக்குப்பதிவு
மகாராஷ்டிராவில் பிரேயரின்போது மாணவர் ஒருவர் கொட்டாவி விட்டதற்காக அடித்த தலைமை ஆசிரியை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 6ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஒருவர் பிரேயரின்போது கொட்டாவி விட்டுள்ளார். இதற்காக, பள்ளியின் தலைமை ஆசிரியை அந்த மாணவனை அடித்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவன் இதுபற்றி தனது பெற்றோருடன் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மாணவரின் தந்தை, தலைமை ஆசிரியையிடம் அடித்ததற்கான காரணம் குறித்து கேட்டுள்ளார். அதற்கு, ஆசிரியர்களை மதிக்காமல் செயல்பட்டால் அப்படி தான் தண்டிக்கப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
இதனால், கோபத்தின் உச்சிக்கே சென்ற மாணவரின் தந்தை, உடனடியாக நயாநகர் காவல் நிலையத்தில் தலைமை ஆசிரியைக்கு எதிராக புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்றுக் கொண்ட போலீசார், தனியார் பள்ளி தலைமை ஆசிரியை மீது வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.