குஜராத் சட்டமன்ற இறுதிகட்ட தேர்தலில் 68.37 சதவீதம் வாக்குப்பதிவு
குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் இரண்டு கட்டமாக நடைப்பெற்றது. முதற்கட்ட தேர்தல் 89 சட்ட மன்ற தொகுதிகளுக்கு கடந்த 9ந் தேதி முடிந்து சுமார் 68 சதவீத வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில் இரண்டாம் கட்டமாக மீதமுள்ள 93 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குபதிவு தேர்தல் ஆணையம் திட்டமிட்டபடி இன்று நடைபெற்றன. மாலை 5 மணி நிலவரப்படி 62.24 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன
வட மற்றும் மத்திய குஜராத் மாநிலத்தில் சுமார் 2.20 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 14 மாவட்டங்களில் உள்ள 93 தொகுதிகளில் மொத்தம் 851 வேட்பாளர்கள் களம் கண்டனர். இதில் 69 பெண் வேட்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 25,558 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இன்று காலை முதல் வாக்குப்பதிவு நடந்தது. ஆண்கள், பெண்கள் என வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். பிரதமர் நரேந்திர மோடி சபர்மதி தொகுதியில் தனது வாக்கினை பதிவு செய்தார். தேர்தல் நேரம் முடிவில், இறுதியாக 68.37 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. முதற்கட்ட தேர்தல் கடந்த 9ந் தேதி நடைபெற்றது. இரண்டு கட்டங்களாக நடைப்பெற்ற தேர்தல் முடிவுகள் 18ம் தேதி தெரியவரும்.
கூடுதல் தகவலாக கடந்த 2012ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பா.ஜ .க 115 தொகுதிகளை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் 61 தொகுதிகளை கை பற்றியது. 22 ஆண்டுகால பா.ஜ.க ஆட்சி தொடருமா ?