அமெரிக்க நாடாளுமன்றத்திற்குச் செல்வாரா இந்தியர் அருணா மில்லர்?
அமெரிக்க நாடாளுமன்ற வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் முதனிலை தேர்தல் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
ஜூலை 26-ஆம் தேதி, வாஷிங்டன் டி.சி.யின் புறநகரான மேரிலேண்டில் நடைபெறும் முதனிலை தேர்தலில் அமெரிக்க இந்தியரான அருணா மில்லர் போட்டியிடுகிறார்.
ஜனநாயக கட்சி வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் இந்தத் தேர்தலில் தனது கட்சியின் வேட்பாளரும் தொழிலதிபருமான டேவிட் டிரோனை எதிர்த்து அருணா மில்லர் போட்டியிடுகிறார். டேவிட் டிரோன் இந்தத் தேர்தலுக்காக 10 மில்லியன் டாலர் (ஏறக்குறைய 68 கோடி ரூபாய்) சொந்த பணத்தை செலவிட்டுள்ளாராம். அருணா மில்லர், பலரது உதவியோடு 1.36 மில்லியன் டாலர் (ஏறக்குறைய 9 கோடி ரூபாய்) திரட்டி செலவிடுகிறார்.
இந்தியாவின் ஹைதராபாத்தைச் சேர்ந்த அருணா மில்லர், சிவில் எஞ்ஜினியராவார். தற்போது 53 வயதாகும் அருணா, தனது ஏழாவது வயதில் அமெரிக்காவுக்கு வந்தவர். 2010-ஆம் ஆண்டு மேரிலேண்ட், ஹவுஸ் ஆஃப் டெலிகேட்ஸ் என்னும் மாநில கீழவைக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
தற்போது அவர் டேவிட் டிரோனை எதிர்த்து வெற்றி பெற்று விட்டால், எளிதாக பொது தேர்தலில் வெல்லுவதற்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அப்படி இரு தேர்தல்களிலும் வெற்றி பெறும் பட்சத்தில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழவையான ஹவுஸ் ஆஃப் ரெப்ரசண்டேடிவ்ஸ்-க்கு அருணா மில்லர் செல்வார்.
ஏற்கனவே பிரமிளா ஜெயபால், வாஷிங்டனிலிருந்து பிரதிநிதிகள் சபையான ஹவுஸ் ஆஃப் ரெப்ரசண்டேடிவ்-க்கு தேர்வாகியிருந்தார். அருணா மில்லர் வெற்றி பெறும் பட்சத்தில், அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு செல்லும் இரண்டாவது அமெரிக்க இந்தியர் என்ற பெருமை கிடைக்கும்.