அரசு மருத்துவமனைகளில் போதை மறுவாழ்வு மையம் : ஐகோர்ட் உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் இன்னும் 8 வாரங்களில் போதை மறுவாழ்வு மையங்களை அமைக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் வீதிக்கு ஒரு டாஸ்மாக் திறந்து, குடிமகன்களை அதிகமாக்கி வருகிறது. குடி பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் அறியாமல், அதிகமாக குடித்து உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்துக் கொண்டே இருக்கிறது.

இந்நிலையில், குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களை திருத்தும் போதை மறுவாழ்வு மையங்களை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மதுரை கிளையில் ராம்குமார் ஆதித்யா என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

இதுபோன்ற மையங்கள் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இல்லாததால் மாதந்தோறும் சுமார் 75 பேர் இறக்கின்றனர் என்றும் ராம்குமார் ஆதித்யா அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று, மதுரை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில், அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் இன்னும் 8 வாரங்களில் போதை மறுவாழ்வு மையங்களை அமைப்பது தொடர்பாக தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

More News >>