புள்ளிபட்டியலில் கடைசி இடம்: நடப்பு சாம்பியன் ஜெர்மனி வெளியேற்றம்
ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நான்கு லீக் போட்டிகள் நடைபெற்றது. ஒரு போட்டியில் "எப்" பிரிவில் இடம் பெற்ற கொரிய அணியை எதிர் கொண்டது நடப்பு சாம்பியன் ஜெர்மனி அணி.
ஆரம்பம் முதலே ஜெர்மனி அணி வேகமாகவும் விறுவிறுப்பாகவும் ஆடியது. ஆனால் கோல் அடிக்க முடியாமல் திணறியது. கொரிய அணியின் கோல் கீப்பர் சிறப்பாக செயல்பட்டு, ஜெர்மனி அணியின் கோல்களை தடுத்து அசத்தினார். அதனால் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காமல் இருந்தன.
இரண்டாம் பாதியிலும் இதே நிலை நீடித்தது. போட்டி நேரம் முடிந்ததும் கூடுதல் நேரமும் வழங்கப்பட்டது. கொடுக்கப்பட்ட கூடுதல் நேரத்தை பயன்படுத்தி கொரிய அணியின் கிம் யங்வான் ஒரு கோல் அடித்து தங்கள் அணியை முன்னிலைப்படுத்தினர்.
ஒரு கட்டத்தில் ஜெர்மனி அணி தனது கோல் கீப்பரை ஆடுகளத்தில் இறக்கி அட வைத்தது. சந்தர்ப்பத்தை பயன்படுத்திய கொரிய அணி மீண்டும் ஒரு கோல் அடித்து அசத்தியது. மேலும், கொடுக்கப்பட்ட கூடுதல் நேரத்தில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இதனால் 2-0 என்ற கோல் கணக்கில் கொரிய அணி வெற்றி பெற்றது.
இதன் எதிரொலியாக "எப்" பிரிவில் இடம் பெற்று இருந்த நடப்பு சாம்பியன் ஜெர்மனி அணி புள்ளிபட்டியலில் கடைசியாக இருப்பதால் உலகக்கோப்பை கால்பந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து போட்டியில் இருந்து வெளியேறியது.