அரக்கோணம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து
அரக்கோணம் அருகே சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தினால், சென்னை -அரோக்கோணம் இடையே ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
பெங்களரூரில் இருந்து அரோக்கோணம் நோக்கி நேற்று இரவு சரக்கு ரயில் வந்துக் கொண்டிருந்தது. அரக்கோணத்தில் உள்ள கார் முனையத்தில் இருந்து கார் ஏற்றி செல்வதற்காக இந்த ரயில் வந்துக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போது, சரக்கு ரயிலின் 15 மற்றும் 16வது பெட்டிகள் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதனால், காட்பாடி - அரக்கோணம் வழியாக செல்லக் கூடிய அனைத்து ரயில்களும் பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டன.
இதன்பிறகு, விபத்துக்குள்ளான பெட்டிகளை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வந்தது. இதையடுத்து, காட்பாடி - அரக்கோணம் வழியாக செல்லக்கூடிய ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டது.
அதன்படி, இன்று காலை 7.25 மணிக்கு புறப்பட இருந்த மங்களூரு விரைவு ரயில் 8.30 மணிக்கு இயக்கப்பட்டது. இதேபோல், சென்னையில் இருந்து கோயம்புத்தூர் வரை செல்லக்கூடிய சதாப்தி விரைவு ரயில் காலை 7.15 மணிக்கு பதிலாக 9 மணிக்கு புறப்பட்டது. கோலை விரைவு ரயில் 6 மணிக்கு பதிலாக 9.30 மணிக்கு புறப்படுகிறது. இந்த திடீர் ரயில் சேவை பாதிப்பால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.