தடயவியல் துறை அலுவலகத்தில் நிர்மலா தேவி குரல் மாதிரி பரிசோதனை!
குரல் மாதிரி பரிசோதனைக்காக, பேராசிரியை நிர்மலா தேவி சென்னை தடயவியல் துறை அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் வழிநடத்த முயன்றதாக அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.
நிர்மலா தேவியின் குரல் மாதிரி பரிசோதனை செய்ய, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சிபிசிஐடி அனுமதி கோரியது.
நிர்மலா தேவியை 3 நாட்கள் சென்னை அழைத்து சென்று விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதனையடுத்து, பலத்த பாதுகாப்புடன் சென்னை அழைத்துவரப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இன்றைய தினம் போலீஸ் பாதுகாப்புடன் சென்னை காமராஜர்சாலையில் உள்ள தடயவியல் அலுவலகத்திற்கு நிர்மலா தேவி அழைத்து வரப்பட்டார். அந்த துறையின், கூடுதல் இயக்குநர் நளினி, இணை இயக்குநர் ஹேமலதா ஆகியோர் நிர்மலாதேவியின் குரல் மாதிரியை ஆய்வு செய்து வருகின்றனர்.
குரல் மாதிரி முடிவுகள், சீலிடப்பட்ட கவரில் வைத்து, இன்னும் சில தினங்களுக்குள் வழக்கு நடைபெறும் நீதிமன்றத்தில் நேரடியாக தடயவியல் துறை சார்பாக அளிக்கப்பட உள்ளது. ஆய்வு முடிந்த பிறகு நிர்மலா தேவி மீண்டும் மதுரை மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட உள்ளார்.