ராம்தேவ், சத்குரு பற்றி எங்களுக்குக் கவலை இல்லை- அமைச்சர் ஜெயக்குமார்

தூத்துக்குடியில் இருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டதாகவும், இனி அது திறக்கப்படாது என்றும் தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை, சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதாகக் கூறி அதற்கு எதிராக தொடர்ந்து பல ஆண்டுகளாக போராட்டம் நடந்து வந்தது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்தது.

அப்போது போலீஸார், போராடிய மக்கள் மீது நடத்திய துப்பாக்கிசூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, தமிழக அரசு ஆலையை மூடுவதற்கு அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணைக்கு எதிராக ஸ்டெர்லைட் நிர்வாகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில் யோகா குரு பாபா ராம்தேவ் மற்றும் சத்குரு ஜக்கி வாசுதேவ் ஆகியோர் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு எதிராக ட்வீட் செய்தனர். 

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், ‘ஸ்டெர்லைட் ஆலை இனி திறக்கப்படாது. அது குறித்து ஒரு ஸ்திரமான முடிவை தமிழக எடுத்துவிட்டது. ராம்தேவ் கருத்து பற்றியோ சத்குரு கருத்து பற்றியோ எங்களுக்குக் கவலை இல்லை. ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டது’ என்றுள்ளார் உறுதியுடன்.

More News >>