டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மீது வழக்கு பாய்கிறது?
புது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது டெல்லி போலீஸ் வழக்குப் பதியலாம் எனக் கூறப்படுகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி டெல்லியின் தலைமைச் செயலர் அன்ஷு பிரகாஷ், கெஜ்ரிவால் இல்லத்திற்கு சென்றுள்ளார். அப்போது, கெஜ்ரிவால் முன்னிலையில் அவர் தாக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார். மேலும் இது தொடர்பாக போலீஸில் புகார் கொடுத்தார்.
இந்தத் புகாரின் அடிப்படையில் தான் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ஆகியோர் மீது கிரிமினல் குற்றப் பிரிவின் கீழ் வழக்கு தொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. பிரகாஷின் புகாரை அடுத்து, கெஜ்ரிவால் வீட்டில் இரண்டு முறை சோதனையிட்டது டெல்லி போலீஸ்.
அதே நேரத்தில், பிப்ரவரி மாதம் நடந்த சந்திப்புக்குப் பிறகு தலைமைச் செயலர் உட்பட டெல்லியில் இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அரசின் எந்த செயலுக்கும் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றும் அமைச்சர்கள் அழைக்கும் எந்தக் கூட்டத்துக்கும் செல்வதில்லை என்றும் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.
மேலும், இந்தக் காரணத்தை முன் வைத்து, டெல்லியின் துணை நிலை ஆளுநர் அனில் பைஜல் இல்லத்தில் 9 நாட்கள் உள்ளிருப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டார் கெஜ்ரிவால். அப்போது, ‘அறிவிக்கப்படாத ஸ்டிரைக்கில் இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீண்டும் பணிக்குத் திரும்பும் வரையில் ஆளுநரின் வீட்டை விட்டு நகர மாட்டேன்’ என்று தெரிவித்தார்.
இப்படி கடந்த சில மாதங்களாக டெல்லி அரசியல் களத்தில் ஏதாவது நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில், கெஜ்ரிவால் மீது புதியதாக வழக்கு தொடரப்படலாம் என்று கூறப்பட்டத் தகவலால் மீண்டும் டெல்லி அரசியல் களம் பரபரத்துள்ளது.