மாநகராட்சி கட்டுப்பாட்டில் 24 மணி நேர குடிநீர் திட்டம் - எஸ்.பி.வேலுமணி

24 மணி நேர குடிநீர் விநியோக திட்டம் முழுக்க முழுக்க கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதியாக தெரிவித்துள்ளார்.

‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதற்காக பிரான்ஸ் நாட்டின் ‘சூயஸ்’ நிறுவனத்துடன் கோவை மாநகராட்சி ரூ.2961 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த திட்டத்தை தமிழக அரசே செயல்படுத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது.

இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் குரல் எழுப்பினார். இதற்கு பதிலளித்த உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, 24 மணி நேர குடிநீர் திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் அனைத்து கட்டமைப்புகளும், கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

"குடிநீர் கட்டணம் நிர்ணயம், கட்டண பட்டியல் தயாரித்து வசூலிக்கும் உரிமை அந்த நிறுவனத்திற்கு வழங்கப்படவில்லை. 24 மணி நேர குடிநீர் திட்டத்தில் ஆற்றுநீர், ஆழ்குழாய் கிணறு ஆகியவை அனைத்தும் கோவை மாநகராட்சியின் ஆளுகைக்கு உட்பட்டதாகவே இருக்கும்" என அமைச்சர் வேலுமணி விளக்கம் அளித்துள்ளார்.

More News >>