கல்வி கடன் நிராகரிப்பு சரியே... உயர் நீதிமன்றம்
கடன் செலுத்தாதவர்களின் பின்னால் ஓடுவதை விட, தகுதி இல்லாதவர்களுக்கு கடன் வழங்க மறுப்பது நல்லது என சென்னை உயர் நீதிமன்றம் வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
நாகபட்டினம் அந்தணன்பேட்டையில் உள்ள செவிலியர் கல்லூரியில் மாணவர் சேர்க்கை பெற்ற தீபிகா என்ற மாணவி, கல்வி கடன் கேட்டு பாரத ஸ்டேட் வங்கியின் தலைஞாயிறு கிளையில் விண்ணப்பித்தார்.
இந்த விண்ணப்பத்தை வங்கி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிராகரித்தது. வங்கியின் இந்த உத்தரவை ரத்து செய்து தனக்கு 3 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கல்வி கடன் வழங்க உத்தரவிட கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தீபிகா வழக்கு தொடர்ந்திருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், "அரசியல் நிர்பந்தத்தின் காரணமாக பல நபர்களுக்கு வங்கிகள் கடன் வழங்குகின்றன. அந்த நபர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிவிடுகின்றனர். இதனால் அப்பாவி ஊழியர்கள் பாதிக்கப்படுகின்றனர்" என்றார்.
“மேலும், கடனை பெற்று விட்டு திருப்பி செலுத்தாதவர்கள் பின்னால் ஓடுவதை விடுத்து, திருப்பி செலுத்த தகுதி இல்லாதவர்களின் கடன் விண்ணப்பங்களை ஆரம்பத்திலேயே நிராகரிப்பதே நல்லது” என வங்கிகளுக்கு அறிவுறுத்திய நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்தார்.