மெஸ்ஸி வெற்றிக்குக் காரணம் ஆண்டவனா தாயத்தா?
ரஷ்ய உலக கோப்பையில் இதுதான் கடைசி ஆட்டமா? என்ற கேள்வியுடன் செவ்வாயன்று செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் களம் இறங்கியது அர்ஜென்டினா அணி என்னும் "லா அல்பிஸில்லெஸ்டே". சீனியர் ஆட்டக்காரர்கள் பலருக்கு தாங்கள் இளநீலம் மற்றும் வெள்ளை நிற சட்டையை அணிந்து கொள்வது இது கடைசி முறையாகி விடுமோ என்ற அச்சமும் இருந்திருக்கக்கூடும்.
2018 உலக கோப்பை கால்பந்து போட்டி அட்டவணையில் டி பிரிவில் அர்ஜெண்டினா, நைஜீரியா, குரோஷியா மற்றும் ஐஸ்லாந்து அணியில் இடம் பெற்றிருந்தன. ஐஸ்லாந்துடன் 1 -1 என்ற கணக்கி்ல் டிரா, குரோஷியாவுடன் 3 - 0 என்ற கணக்கில் தோல்வி ஆகிய மோசமான கணக்குடன் நைஜீரியாவை சந்திக்க வந்தது "லா அல்பிஸில்லெஸ்டே". அவர்களது ஜாம்பவான் மாரடோனாவின் கண்களை சந்திக்க வலுவில்லாமல் நின்றிருந்தனர் அர்ஜெண்டினா வீரர்கள்.
அந்த ஞாயிற்றுக்கிழமைதான் தன்னுடைய 31வது பிறந்தநாளை கொண்டாடியிருந்தார் அர்ஜெண்டினாவின் கேப்டனும் நட்சத்திர வீரருமான லியோனெல் மெஸ்ஸி. கடந்த இரு போட்டிகளிலும் அவர் கோல் எதுவும் போடவில்லை. 2014 உலக கோப்பை போட்டியில் தன் அணியை இறுதி சுற்றுவரைக்கும் அழைத்துச் சென்ற மெஸ்ஸி, 2018 போட்டியில் கணக்கையே தொடங்கவில்லை.
நைஜீரியாவுடனான ஆட்டம் தொடங்கிய 14வது நிமிடம், மெஸ்ஸிக்குள் இருக்கும் கால்பந்து வீரன் வெளிப்பட்டான். 2018 உலக கோப்பையின் 100வது கோலை அடித்து, தனது கணக்கைத் தொடங்கினார் மெஸ்ஸி. தனது திறமை இன்னும் மங்கவில்லை என்று நிரூபித்த மெஸ்ஸி, தமது 19வது வயதில் 2006-ம் ஆண்டு செர்பியாவுக்கு எதிராக தமது முதல் கோலை பதிவு செய்தார்.
31வது வயதிலும் கோல் அடித்து, பதின்ம வயது மற்றும் முப்பதுகளில் உலக கோப்பை போட்டிகளில் கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை சொந்தமாக்கிக் கொண்டுள்ளார்.
ஆட்டத்தின் பிற்பாதியில் நைஜீரியாவின் விக்டர் மோசஸ் ஒரு கோல் அடிக்க, கோல் கணக்கு சமநிலையை எட்டியது. பரபரப்பான ஆட்டம் முடிய நான்கு நிமிடங்கள் இருந்தநிலையில் மார்கோஸ் ரோஜோ இன்னொரு கோல் போட்டார். அர்ஜெண்டினா, அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியது. தங்கள் அணியின் "ஆண்டவன் எங்கள் பக்கம் இருக்கிறான் என்பது எனக்குத் தெரியும்" என்று கருத்து தெரிவித்தார் மெஸ்ஸி.
வெற்றியோடு திரும்பி மெஸ்ஸியை செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டனர். அதில் ஒருவர், "என் தாயார் தங்களுக்குக் கொடுத்ததாக ஒரு தாயத்தை உங்களிடம் கொடுத்திருந்தேன். அதை வைத்திருக்கிறீர்களா, இல்லை தூர எறிந்து விட்டீர்களா?" என்று சங்கடமான ஒரு கேள்வியை கேட்டார்.
சட்டென்று குனிந்த மெஸ்ஸி, "பாருங்கள்" என்று தன் காலுறையை விலக்கிக் காட்டினார். மெஸ்ஸியின் கால் மணிக்கட்டில் தெரிந்த சிவப்பு நிற தாயத்தைப் பார்த்த அந்தச் செய்தியாளர் ஆச்சரியத்தில் திக்குமுக்காடிப்போனார்.
16 அணிகள் கொண்ட சுற்றுக்கு முன்னேறியுள்ள அர்ஜெண்டினா, வரும் சனிக்கிழமை ஃபிரான்ஸ் அணியை சந்திக்க புதிய உற்சாகத்துடன் காத்திருக்கிறது. மெஸ்ஸியின் மாயாஜாலம் தொடருமா பார்ப்போம்.