எல்லைதாண்டிய பாகிஸ்தான் சிறுவன்: புத்தாடையுடன் வழியனுப்பிய இந்தியா
சில நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து 11 வயது சிறுவன் தவறுதலாக இந்திய எல்லைக்குள் நுழைந்துவிட்டான்.
அவனை இன்று இனிப்பு மற்றும் புத்தாடைகளுடன் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளது இந்தியா. ஜூன் 24 ஆம் தேதி முகமது அப்துல்லா என்ற பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த சிறுவன், தவறுதலாக இந்திய பகுதிக்குள் நுழைந்துள்ளான்.
அவனை இந்திய ராணுவத்தினர் பிடித்துள்ளனர். இதையடுத்து ஜம்மூ - காஷ்மீர் போலீஸிடம் சிறுவனை ராணுவத்தினர் ஒப்படைத்துள்ளனர். பின்னர், சிறுவனை திரும்ப அனுப்புவதற்குத் தேவையான நடவடிக்கைகளை போலீஸ் எடுத்துள்ளது.
அதன்படி, இன்று பாகிஸ்தான் அதிகாரிகளிடம் சிறுவன் ஒப்படைக்கப்பட்டான். சிறுவனை ஸ்வீட் பாக்ஸ் மற்றும் புத்தாடைகளுடன் இந்திய ராணுவத்தினர் வழியனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து ராணுவத் தரப்பு, ‘இந்திய ராணுவம் தன்னுள் வரையறுத்துள்ள கொள்கைகள் படிதான் செயல்படும்.
அப்பாவி பொது மக்களின் விஷயங்களை கையாளும் போது மிகுந்த பொறுப்புடன் தான் ராணுவம் செயல்படும்’ என்று கூறியுள்ளது.