அமைச்சர் இல்லத்தில் நண்டு விடும் போராட்டம்!
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இல்லத்தில் நண்டு விடும் போராட்டம் அறிவித்து, 2 நண்டுகளுடன் வந்த நர்மதா என்ற பெண் கைது செய்யப்பட்டார்.
பட்டினப்பாக்கத்தில் உள்ள அமைச்சர் ஜெயக்குமார் இல்லத்திற்கு வந்த நர்மதா என்ற பெண் நண்டு விடும் நூதன போராட்டத்தை மேற்கொண்டார்.
“மீனவர்களுக்காக அறிவித்த பல திட்டங்கள் செயல்படுத்தவில்லை. இதேபோல் தொடர்ந்து நடந்து கொண்டால், அடுத்த கட்டமாக ஆமை விடும் போராட்டம் நடத்தப்படும்" என அந்த பெண் எச்சரிக்கை விடுத்தார்.
“ஜெயக்குமார் அமைச்சர் ஆவதற்கு முன்பு இருந்த சொத்துக்களை விட அதிக சொத்துகளை சேர்த்துள்ளார். அவர் மட்டுமல்லாது அனைத்து அமைச்சர்கள் வீட்டிலும் வருமானவரி துறையினர் சோதனை நடத்தவேண்டும்" என அந்த பெண் வலியுறுத்தினார். இறுதியாக போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
இந்த போராட்டத்தை சுட்டிக்காட்டி சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், "அனைத்திற்கும் துணிந்தே தான் அரசியலுக்கு வந்துள்ளேன்" என்றார்.