நகைக்கடை கொள்ளை சம்பவம்: தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி தினேஷ் சவுத்ரி கைது
ஜோத்பூர்: சென்னை, கொளத்தூரில் உள்ள நகைக்கடை ஒன்றில் கொள்ளையடித்து தப்பிய கொள்ளையர்களில் முக்கிய குற்றவாளி தினேஷ் சவுத்ரியை ராஜஸ்தானில் போலீசார் கைது செய்தனர்.
சென்னை கொளத்தூரை சேர்ந்த முகேஷ் குமார் என்பவர் கடந்த 15 ஆண்டுகளாக புழல் புதிய லட்சுமிபுரம் கடப்பா சாலையில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் தெருவில் மகாலட்சுமி தங்க மாளிகை என்ற நகைக்கடை நடத்தி வந்தார். இந்நிலையில், கடந்த மாதம் 16ம் தேதி அவரது கடையின் கூரையில் துளையிட்டு கொள்ளையர்கள் நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பினர்.
கொள்ளை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, நகைக்கடையின் மாடியில் உள்ள மற்றொரு கடையை வாடகைக்கு எடுத்த ராஜேஷ் கூட்டாளிகளுடன் கொள்ளையடித்தது தெரியவந்தது.
இவர்கள் ராஜஸ்தானில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, சென்னை மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன் உள்பட தனிப்படை போலீசார் ராஜஸ்தானுக்கு விரைந்தனர். அங்கு, கொள்ளையர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றபோது, கொள்ளையன் ஒருவன் துப்பாக்கியால் சுட்டான். இதில், குண்டு பாய்ந்து காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன் உயிரிழந்தார். இவரது உடல் நேற்று சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, பின்னர், அவரது சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, கொள்ளையர்களை பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக இறங்கினர். போலீசார் நடத்திய விசாரணையில் ஏற்கனவே ராஜஸ்தானில் கொள்ளை வழக்கு ஒன்றில் கைதான தினேஷ் சவுத்ரிக்கும் கொளத்தூர் நகைக்கடை கொள்ளை வழக்கிற்கும் தொடர்பு இருப்பதை போலீசார் கண்டறிந்தனர். இதையடுத்து, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் வைத்து தினேஷ் சவுத்ரியை போலீசார் கைது செய்தனர்.
இந்த கொள்ளை சம்பவத்தில் தலைமறைவாக உள்ள மற்ற கொள்ளையர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர்.