சிறையில் சசிகலாவை சந்தித்தார் டி.டி.வி.தினகரன்!
பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் நேரில் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்புக்கு பின்னர் தினகரன் செய்தியார்களுக்கு அளித்த பேட்டியில், “தமிழ்நாட்டில் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தினால் ஆளும் அதிமுக படுதோல்வி அடையும்.
எனவே, இந்த தேர்தலை தள்ளிவைத்துவிட்டு அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பண பலம் மற்றும் போலீஸ் பலத்தை பயன்படுத்தி வெற்றி பெற அதிமுக திட்டமிட்டுள்ளது.
தமிழக மக்கள் இந்த அரசை ஏற்க தயாராக இல்லை. அதிமுக அரசு வீட்டுக்குச் செல்வது உறுதி. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் துரோகம் செய்தவர்கள். அவர்கள் இருவரும் ஒரு நாணயத்தின் இரு பக்கத்தை போன்றவர்கள். இந்த ஆட்சிக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று கேட்டு நாங்கள் மனு தாக்கல் செய்தோம். ஆனால் 3-ஆவதாக ஒரு நீதிபதியை நியமித்து அவர் இந்த வழக்கை சரியான முறையில் விசாரிப்பார் என்று நீதிபதிகள் கூறி இருக்கிறார்கள். எனவே, இந்த விசாரணையில் எங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
எனது ஆதரவாளர் புகழேந்திக்கு, சிறை லஞ்சப்புகார் தொடர்பாக கர்நாடக ஊழல் தடுப்பு படை சம்மன் அனுப்பியது. எப்படியாவது சதி செய்து என்னை ஏதாவது ஒரு வழக்கில் சிக்க வைக்க வேண்டும் என்று சிலர் முயற்சி செய்கிறார்கள்.
எங்களுக்கு மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை. சிறைத்துறை டி.ஜி.பி.யாக இருந்த சத்தியநாராயணராவை நான் பார்த்தது கூட கிடையாது. எனக்கு சம்மன் வந்தால் நானும் ஆஜராக தயாராக இருக்கிறேன்” என்று அப்போது கூறினார்.