ஜம்முவில் நிலச்சரிவு: அமர்நாத் பயணத்துக்குத் தடை!
”இன்று மோசமான வானிலை காரணமாகவும் சேதம் அடைந்த சாலைகளின் காரணமாகவும் பால்தல் மற்றும் பஹால்கம் சாலைகளின் வழியாக மேற்கொள்ளப்படும் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது” என ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறை கண்காணிப்பகம் அறிவித்துள்ளது.
மூன்று கட்ட யாத்திரைக் குழுவினர் தங்களது பயணத்தை பகவதி நகர் கூடாரத்தில் இருந்து தொடங்கினர். ஆனால், பஹால்கம் சாலை சேதத்தை அடுத்து அக்குழுவினர் டிக்ரி கூடார மையம் அருகே நிறுத்தப்பட்டு அங்கேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். மோசமான வானிலை காரணமாகவே அக்குழுவினரின் பயணம் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் யாத்திரை மேற்கொண்டவர்கள் அனைவரும் பாதுகாப்பாக டிக்ரி மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவுகள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில் ”பழுதடைந்த சாலைகள் காரணமாகவும் அபாயகரமான வானிலையின் காரணமாகவும் தான் யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நாளை மீண்டும் வானிலை அறிக்கையை ஆய்வு செய்த பின்னர் தான் யாத்ரீகள் குகைக் கோயிலுக்குச் செல்லலாம்” எனக் கூறியுள்ளனர்.