புதிய மாணவர்களுக்கு ராஜமரியாதையோடு உற்சாக வரவேற்பு!
தாராபுரம் அருகே அரசு பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு மேள தாளத்துடன் ராஜமரியாதை அளிக்கப்பட்டது அப்பகுதி மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், சுமார் 800க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளிகளை மூடுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. மேலும், அதைத் தவிர்க்க மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும் பள்ளிகளுக்கு கால அவகாசம் வழங்கியது.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த அலங்கிய ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் இந்த ஆண்டு புதிதாக 55 மாணவ மாணவிகள் சேர்ந்துள்ளனர். மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஆசிரியர்கள் வரவேற்பு விழா எடுத்தனர்.
புதிய மாணவ மாணவிகளுக்கு மாலை அணிவித்து, தாரை தப்பட்டைகள் முழங்க ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்து வரப்பட்டனர். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.
தனியார் பள்ளிகளை புறக்கணித்து, அரசு பள்ளியில் மாணவர்களை சேர்ந்த பெற்றோருக்கு ஆசிரியர்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
பள்ளிக்கு புதிதாக வந்த மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் நடந்த, ராஜ மரியாதையோடு நடந்த வரவேற்பு விழா அனைவரையும் கவர்ந்துள்ளது.