விரிவுரையாளர் நியமனத்தில் கோடிக்கணக்கில் ஊழல்?
பாலிடெக்னிக் விரிவுரையாளர் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பொறுப்பிற்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் மிகப்பெரிய அளவிற்கு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதுவரை வெளிவந்துள்ள செய்திகளின் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்ட 2000 பேரில் குறைந்தது 220 பேரின் மதிப்பெண்கள் 50 மதிப்பெண்களிலிருந்து 100 மதிப்பெண் வரை வித்தியாசம் இருந்துள்ளது.
இதனால் தேர்வாணையம் நேர்முகத் தேர்வை ரத்து செய்து விட்டு அனைத்து போட்டியாளர்களின் விடைத்தாள்களை வெளியிட்டு சரிபார்க்க கோரியிருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன.
இந்நிலையில், போட்டியாளர்களில் சிலர் கூடுதல் மதிப்பெண்களை பெறுவதற்காக 25 முதல் 30 லட்சம் ரூபாய் வரை தரகர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாகவும், ரூ. 50 கோடிக்கும் அதிகமான தொகை இவ்வாறு பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
இதனால், தகுதியற்றவர்கள் முறைகேடாக பணி நியமனம் பெறுவதாகவும், தகுதி வாய்ந்தவர்கள் நிராகரிக்கப்படுவதாகவும் தகுதி வாய்ந்த மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.