அமெரிக்க அதிபருக்கு எதிராகக் களம் இறங்கிய பெண்கள்!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின், ‘நோ டாலரன்ஸ்’ குடியேற்றக் கொள்கைக்கு எதிராக வாஷிங்டனில் நூற்றுக்கணக்கான பெண்கள் வீதியில் இறங்கி போராடியுள்ளனர்.

இந்த சம்பவம் உலக அளவில் பெரும் கவனம் பெற்றுள்ளது. டொனாட்டு ட்ரம்ப், அதிபராக பதவியேற்றதிலிருந்து, வேறு நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு ‘சட்டத்துக்கு புறம்பாக’ வருபவர்கள் மீது எந்த வித இரக்கமும் காட்டப்படாது என்று கூறி வந்தார். இதற்காகவே புதிய சட்ட விதிகளை வகுத்தார்.

அதன்படி, ‘அகதிகளாக வரும் வெளிநாட்டினர் எல்லையிலேயே பிடிக்கப்படுவர். குழந்தைகள் மற்றும் பெண்கள் ஓர் இடத்தில் வைக்கப்படுவவர். ஆண்கள், இதற்காகவே உருவாக்கப்பட்டுள்ள மையங்களில் அடைக்கப்படுவர். அனைவரும் சட்ட நடைமுறைகளுக்கு உட்படுத்தப்படுவர்’ என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நடைமுறையால் குழந்தைகள் அவர்களின் குடும்பங்களிடமிருந்து பிரிக்கப்படுகிறார்கள். இது பெரும் அநீதி என்று பரவலாக கூறப்பட்டது. இதையடுத்து, ‘குழந்தைகளை பிரிக்கும் நடைமுறைக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும். மற்ற விதிகள் பின்பற்றப்படும்’ என்று ட்ரம்ப் அரசு தெரிவித்தது.

இந்த நடைமுறையை எதிர்த்து வாஷிங்டனில் இருக்கும் ஹார்ட் செனட் அலுவலகத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் பதாகைகள் ஏந்தியபடியும், கோஷங்கள் எழுப்பிய படியும் போராடியுள்ளனர். அவர்கள், குடியேற்றம் மற்றும் அமலாக்க ஏஜென்சியை தடை செய்யக் கோரியும், குடும்பங்களை அடைத்து வைக்கும் நடைமுறைக்கு முடிவுகட்டக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் முடிவடைந்த போது, மொத்தம் 575 பேரை கைது செய்துள்ளதாக உள்ளூர் போலீஸ் தகவல் தெரிவித்தது. 

More News >>