ரெண்டுங் கெட்டான் நிலையில் புதுச்சேரி அரசு - நாராயணசாமி
புதுச்சேரி மாநிலம் ரெண்டுங் கெட்டான் நிலையில் இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி வேதனை தெரிவித்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தரிசனம் செய்தார். பின்னர் பேட்டி அளித்த அவர், "டெல்லி, பாண்டிச்சேரி ஆகியவை ரெண்டுங் கெட்டான் நிலையில் இருப்பதால், நிதி ஒதுக்கீடு செய்வதில் குளறுபடி ஏற்படுகிறது. இதனால் மாநில வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுகின்றன” என தெரிவித்தார்.
“ஆளுநர், முதல்வர், அரசு அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோரின் அலுவலக பணிகளை தடுத்தால் தான், அது தண்டனைக்குரிய குற்றமாகும். ஆனால் ஆளுநர்கள் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்து பொதுமக்கள் தொடர்பான பிரச்சினையில் தலையிடும் போது பொதுமக்கள் போராட்டம் நடத்துவது வழக்கம்” என்றார்.
மேலும், “தமிழக அரசு மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் பிடியிலிருந்து விடுபட்டு மக்களுக்கு சேவை செய்யும் அரசாக மாற்றிக்கொள்ள வேண்டும்” என தமிழக அரசுக்கு நாராயணசாமி அறிவுறுத்தினார்.