இங்கிலாந்துக்கு எதிரான தொடர்: பும்ரா வெளியேற்றம்!

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான டி20 தொடரிலிருந்து காயம் காரணமாக வெளியேற்றப்பட்டுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் பௌலர் பும்ரா.

இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட மிக நீண்டத் தொடரை விளையாட உள்ளது. இந்திய அணிக்கு மிகவும் சவாலானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இந்தத் தொடர் வரும் 3 ஆம் தேதி தொடங்க உள்ளது.

இந்தத் தொடருக்கு முன்னர் அயர்லாந்து கிரிக்கெட் அணியுடன் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது இந்தியா. முதல் டி20 போட்டியின் போது ஒரு கேட்ச் பிடித்த இந்திய பௌலர் பும்ரா, தனது இடது கையின் கட்டைவிரலில் காயம் ஏற்படுத்திக் கொண்டார். இதனால், அவர் இரண்டாவது டி20 போட்டியில் விளையாடவில்லை. தொடர்ந்து பயிற்சிகளிலும் பங்கெடுக்கவில்லை.

இந்நிலையில், அவரின் இடது கட்டைவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால், அடுத்து வரவுள்ள இங்கிலாந்து டி20 தொடரில் பங்கேற்க மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடருக்குள் பும்ரா குணமடைந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், சீக்கிரமே அவர் இங்கிலாந்தில் இந்திய அணியுடன் இணைவார் என்றும் கூறப்படுகிறது.

More News >>