இங்கிலாந்து நீதிமன்ற உத்தரவை எதிர்த்து விஜய் மல்லையா மனு தாக்கல்

லண்டன்: இங்கிலாந்தில் ரூ.10 ஆயிரம் கோடி சொத்து முடக்கி அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து, விஜய் மல்லையா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, பொதுத்துறை வங்கிகளிடம் ரூ.9 ஆயிரம் கடன்களை வாங்கிவிட்டு அதனை திரும்ப செலுத்தாமல் லண்டனுக்கு தப்பினார்.

இது தொடர்பாக அவரை நாடு கடத்திக்கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய அரசின் முறையீட்டின் மீது லண்டன் நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது.

இதற்கிடையே, பெங்களூருவில் உள்ள கடன் மீட்பு தீர்ப்பாயத்தில் 13 வங்கிகளின் கூட்டமைப்பு வழக்கு தொடுத்தது. அதை விசாரித்து தீர்ப்பாயம், விஜய் மல்லையாவிடம் இருந்து ரூ.6,203 கோடியை 12 சதவீத வட்டியுடன் சேர்த்து ரூ.9 ஆயிரத்து 853 கோடியை வசூலித்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிட்டது.

இதை இங்கிலாந்து நீதிமன்றம் உறுதி செய்து, இங்கிலாந்தில் உள்ள விஜய் மல்லையாவின் ரூ.10 ஆயிரம் கோடி சொத்துகளை முடக்கி உத்தரவிட்டது. இந்நிலையில், தனது சொத்துகளை முடக்கும் உத்தரவை ரத்து செய்யக்கோரி விஜய் மல்லையா இங்கிலாந்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவின் மீதான விசாரணை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

More News >>