ஸ்டெர்லைட் ஆலை தொழிலாளர்களுக்கு மாற்றுப்பணி: அமைச்சர் கடம்பூர் ராஜூ
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் பணிபுரிந்து வந்த பணியாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்க நடவடிக் கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த மே மாதம் 22ம் தேதி ஆயிரக்கணக்கான மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது, போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டோர் காயமைடந்தனர்.
இதைதொடர்ந்து, தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை எடுத்தது. இதன் முதல் கட்டமாக, ஆலையின் குடிநீர் மற்றும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பின்னர், ஆலை மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இதனால், அங்கு பணியில் ஈடுபட்டு வந்த ஊழியர்கள் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர்.
இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையில் பணிபுரிந்து வந்த 100 தொழிலாளர்கள் அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்து கோரிக்கை மனு வைத்தனர்.
இதன் பின்னர், அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியதாவது: பொது மக்களின் எதிர்ப்பை தொடர்ந்து, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடி நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே அந்த ஆலை மீண்டும் திறக்கப்பட்டது. மேலும், ஆலையில் பணியாற்றிய தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கு விரைவில் மாற்றுப்பணி வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.