இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியனை சுட்டு கொலை செய்த நாதுராமின் கூட்டாளிகள் 4 பேர் கைது
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் கொள்ளையர்களை பிடிக்க முயன்றபோது காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியை சுட்டு கொலை செய்த நாதுராமின் கூட்டாளிகள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையை அடுத்த புழலில், நகைக்கடை ஒன்றில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்புடைய கொள்ளையர்களை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் ராஜஸ்தானுக்கு சென்றனர். கொள்ளை கும்பலை சுற்றி வளைத்தபோது, அவர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியனிடம் இருந்த துப்பாக்கியை பறித்து அவரை நாதுராம் என்பவன் சுட்டு கொலை செய்துவிட்டு தப்பினான்.
இதனால், கொலையாளியை பிடிக்கும் பணியில் இரு மாநில போலீசாரும் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், நேற்று முக்கிய குற்றவாளி தினேஷ் சவுத்ரியை போலீசார் கைது செய்தனர். இதை தொடர்ந்து, இன்று நாதுராமின் கூட்டாளிகளான தேஜாராம், அவரது மனைவி பித்யா, மகள்கள் சுகுணா, ராஜல் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மற்ற குற்றவாளிகளை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.