மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் போக்குவரத்து தடை
சென்னை மெரினா கடற்கரையில் நடைபயிற்சி செல்பவர்களுக்காக சர்வீஸ் சாலையில் அதிகாலை நேரத்தில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெரினா கடற்கரை சாலையில் அதிகாலை நேரத்தில் ஏராளமானோர் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக மெரினா கடற்கரையின் சர்வீஸ் சாலையில் பெரும்பாலான மக்கள் நடைபயிற்சி செல்வது வழக்கமாக வைத்துள்ளனர்.ஆனால், அதே நேரத்தில் வாகனங்களும் அதே வழியில் செல்வதால் நடைபயிற்சி செல்பவர்கள் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து போலீஸ் கமிஷனருக்கு புகார்கள் குவிந்தது.
இதைதொடர்ந்து, போலீஸ் கமிஷனர் நேற்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை நடை பயிற்சியில் ஈடுபட்டனர். இதில், அந்த நேரத்தில்வாகனங்கள் செல்வதால் மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து கண்டறிந்தார்.
இதன்பின்னர், பொது மக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் சர்வீஸ் சாலையில் அதிகாலை 5 மணி முதல் காலை 8 மணிவரை இன்று முதல் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.இதற்காக, இரண்டு பக்கமும் தடுப்பு வேலி அமைத்து பேனர் எழுதி வைக்கப்பட்டு அதில் தடை விவரம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.