அம்பதி ராயுடு அவுட் - சர்ச்சைக்குள்ளாகும் யோ யோ டெஸ்ட் #yoyotest

நல்ல பார்மில் இருக்கும் அம்பதி ராயுடு (Ambati Rayudu)இங்கிலாந்து செல்ல இருக்கும் இந்திய அணியில் இருந்து கழற்றி விட காரணமானதால் யோ யோ டெஸ்ட் (Yo Yo test) சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

நடந்து முடிந்த ஐபிஎல் (IPL) போட்டிகளில் 149.75 ஸ்டிரைக்கிங் ரேட்டில் 602 ரன்களை குவித்து சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings - CSK)அணியின் வெற்றிக்கு உதவி புரிந்தார் அம்பதி ராயுடு. இதில் ஒரு செஞ்சுரியும் அடங்கும்.

இந்திய 'ஏ' அணியிலிருந்து சஞ்சு சாம்சன், ஆப்கானிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன்னதாக இந்திய அணியிலிருந்து முகமது ஷமி ஆகியோரும் யோ யோ டெஸ்ட்டை காரணம் காட்டி கட்டம் கட்டப்பட்டுள்ளனர்.

யோ யோ டெஸ்ட் என்றால் என்ன?

முன்பு விளையாட்டு வீரர்களின் உடல் தகுதியை காண்பதற்கு 'பீப்' தேர்வு என்ற ஒரு முறை இருந்தது. கடந்த ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி இந்தியா வருவதற்கு முன்பதாக, இந்திய கிரிக்கெட் அணியின் உடற்தகுதி பயிற்சியாளர் சங்கர் பாசு, யோ யோ என்ற தேர்வு முறையை நடைமுறைப்படுத்தினார்.

டென்மார்க் நாட்டு கால்பந்தாட்ட வீரர்களின் உடல்தகுதியை அளவிடுவதற்கு 1990-ம் ஆண்டில் அதன் பயிற்சியாளர் டாக்டர் ஜேன்ஸ் பாங்க்ஸ்போ கண்டுபிடித்து அறிமுகம் செய்ததுதான் யோ யோ டெஸ்ட்.

யோ யோ டெஸ்ட்டில், இருபது மீட்டர் தொலைவில் இரண்டு கூம்புகள் வைக்கப்பட்டிருக்கும். ஒரு முறை இவற்றின் இடையே ஓடி திரும்பும் முழுச் சுற்று, ஷட்டில் (shuttle) என்று அழைக்கப்படுகிறது. ஒரு முறை இந்தச் சுற்றை பூர்த்தி செய்யும் போது 40 மீட்டர் தூரத்தை வீரர் ஓடி கடந்திருப்பார்.

சோதனைக்கு தயாராகும் வீரர், முதல் 'பீப்' ஒலி கேட்டதும் ஓடத் தொடங்குவார். அடுத்த 'பீப்' ஒலிக்கும் முன்னதாக அவர் இரண்டாவது கூம்பினை அடைந்து, மீண்டும் புறப்பட்ட இடத்தினை நோக்கி திரும்புவார். மூன்றாவது 'பீப்' ஒலிக்கும் முன்பாக அவர் முதலாவது கூம்பினை அடைந்திருக்க வேண்டும். சுற்றுக்களுக்கு இடையே ஐந்து அல்லது பத்து விநாடி இடைவெளி அனுமதிக்கப்படும்.

வீரர் ஒருவர், வேக அளவு (Speed Level) 5 என்ற வீதத்தில் சோதனையை தொடங்குவார். அடுத்த அளவு 9. இரண்டும் ஒரே ஒரு முழுச் சுற்றினை (one shuttle) கொண்டிருக்கும். 11 என்ற அளவு, இரண்டு சுற்றுக்களை கொண்டது. 12 என்ற அளவு மூன்று சுற்றுக்களை கொண்டது.

அதேபோன்று 13 - நான்கு சுற்றுக்களை உடையது. எட்டு சுற்றுக்களை கொண்ட வேக அளவுகள் வரை இந்த சோதனையில் நடைபெறும். வேக அளவு 23 என்பதே யோ யோ டெஸ்ட்டில் அதிக பட்சமான அளவாகும். ஒவ்வொரு வேக அளவுக்கும் கொடுக்கப்படும் நேரம் குறைந்து கொண்டே வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

‘பீப்’ ஒலி கேட்கும் முன்பதாக வீரர் குறித்த கூம்பினை அடைய இயலாவிட்டால், முதலாவது எச்சரிக்கை கொடுக்கப்படும். வழக்கமாக முதல் எச்சரிக்கைக்குப் பிறகு, வேகத்தை போதிய அளவு வைத்துக்கொள்ள சில நினைவுறுத்தல்களும் வழங்கப்படும். ஆனால், மூன்றாவது முறை எச்சரிக்கை விடுக்கப்படும்போது, அந்த வீரருக்கான யோ யோ சோதனை முடிந்ததாக கொள்ளப்படும்.

இந்திய கிரிக்கெட் நிர்வாகம் வீரர்களுக்கான யோ யோ சோதனை தகுதி புள்ளி 16.1 என்று நிர்ணயித்துள்ளது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் தங்கள் வீரர்களுக்கு 17.4 என்றும், இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகள் 19 என்றும் நிர்ணயித்துள்ளன.

யோ யோ டெஸ்ட், கனடா தேசத்தின் மான்ட்ரியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த லுக் லேஹர் உருவாக்கிய லேஹர் டெஸ்ட்டை அடிப்படையாக கொண்டு பிறந்தது என்று கூறப்படுகிறது. லேஹர் டெஸ்ட்டில் வீரர்கள் 12 நிமிடங்களுக்கு இடைவிடாமல் 20 மீட்டர் சுற்றுக்களை ஓடிக்கொண்டே இருக்கவேண்டும். அந்த முறை தற்போது யோ யோவாக மாற்றம் பெற்றுள்ளது. சில கால்பந்து வீரர்கள் 20 அல்லது 21 புள்ளிகளை கூட இந்த சோதனையில் தொட்டிருக்கிறார்கள்.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, யோ யோ டெஸ்ட் கண்டிப்பாக அணி தேர்வு முறையில் இடம்பெற்றிருக்கும் என்று கூறியுள்ளார். தற்போது அம்பதி ராயுடுவுக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்டிருக்கும் சுரேஷ் ரெய்னா முன்பு யோ யோ டெஸ்ட்டில் தேர்ச்சிபெறாதவரே!

வேறு வேறு வகை விளையாட்டுக்களான கால்பந்து மற்றும் கிரிக்கெட் ஆகியவற்றுக்கு ஒரே வகை உடல் தகுதி சோதனை முறையை கையாளலாமா? வெறும் உடல் தகுதியை காரணம் காட்டி திறமையை புறக்கணிக்கலாமா? என்று கேள்விகள் கேட்கப்பட்டு வருகின்றன. அமெரிக்காவின் கூடைப்பந்து கழகமான என்பிஏ (NBA - National Basketball Association) யோ யோ முறையை வீரர்களை தேர்வு செய்ய பயன்படுத்துவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>