மும்பையில் கனமழை- பிரசித்திபெற்ற அந்தேரி ரயில் நிலைய பாலம் சரிவு

மும்பையின் அந்தேரி ரயில் நிலையத்திற்கு அருகே செல்லும் ஒரு மேம்பாலம் கனமழை காரணமாக இன்று காலை சரிந்து விழுந்தது.

மும்பையில் நேற்று இரவு முதல் மிகக் கனமழை பெய்து வருகிறது. அடுத்த 48 மணி நேரத்துக்கு கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அந்தேரி ரயில் நிலையம் அருகில் இருக்கும் கோகலே மேம்பாலம் மழை காரணமாக சரிந்து விழுந்துள்ளது. கோகலே மேம்பாலம், அந்தேரி கிழக்கு மற்றும் அந்தேரி மேற்கு ஆகிய பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையாகும். தினமும் இந்த பாலத்தை ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலம் சரிந்து விழுந்ததை அடுத்து, மும்பை மேற்கு பகுதிகளுக்கு விடப்படும் ரயில்கள் செல்வது கேள்விக்குறியாகியுள்ளது. பொது மக்களையும் பாலத்திற்கு அருகில் வராத வண்ணம் செய்துள்ளனர் போலீஸார். தீயணைப்புத் துறையினர் இடிந்து விழுந்த பாலத்திற்கு இடையில் யாராவது சிக்கி இருக்கிறார்களா என்று தேடி வருகின்றனர்.

தொடர்ந்து, பாலத்தை அப்புறப்படுத்தும் வேலைகள் நடந்து வருகிறது. கனமழை காரணமாக மும்பையின் பெரும்பான்மையான சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. அந்தேரி பகுதியில் பாலம் சரிந்து விழுந்ததன் காரணமாக, போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதாக தகவல்கள் கூறப்படுகின்றன. தேசிய பேரிடர் மீட்புப் பணி மும்பை முழுவது உஷார் நிலையில் வைககப்பட்டுள்ளனர்.

More News >>