காவிரி மேலாண்மை வாரியத்தை எதிர்க்க கர்நாடகா முடிவு!
தமிழகத்துக்கு 31.24 டிஎம்சி காவிரி நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கு மத்தியில் காவிரி நதி நீரை பங்கிட்டுக் கொள்வதில் கடந்த பல வருடங்களாக பிரச்னை நிலவி வந்தது. இதில் கர்நாடகா, காவிரி ஆற்றில் அணைகள் கட்டி, மற்ற மாநிலங்களுக்குத் தேவையான நீரை திறந்து விடாமல் வஞ்சித்து வந்தது.
இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 1 ஆம் தேதி, மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியம் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் காரணமாக அமைக்கப்பட்டது. தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியத்துக்கு தலைவராக மசூத் உசேனை நியமித்தது மத்திய அரசு.
காவிரி மேலாண்மை வாரியத்தின் முதல் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் அனைத்து மாநில பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இதையடுத்து கர்நாடகா, தமிழகத்துக்கு ஜூலை மாதத்தின் 31.24 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டது மேலாண்மை வாரியம்.
இந்நிலையில், தற்போதுகாவிரி மேலாண்மை அமைத்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க கர்நாடகா சட்டபேரவையில் ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.