நெகிழ்ந்த ஸ்ரீதேவி ரசிகர்கள்: ஒரே நாளில் வைரலான ஜான்வி கபூர்
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரின் புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்ட ஒரு மணி நேரத்துக்குள் 2 லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ் பெற்று இன்ஸ்டாகிராம் வைரல் படமாகி உள்ளது.
கோலிவுட்டில் இருந்து பாலிவுட் வரை சென்று கலக்கியவர், மறைந்த நடிகை ஸ்ரீதேவி. இவர் நடித்த ‘மாம்’ திரைப்படத்துக்கு அவரது மறைவுக்குப் பின்னர் தேசிய விருது கிடைத்தது. ஸ்ரீதேவி தனக்குப் பின்னர் தன் மூத்த மகள் ஜான்வி கபூரை மிகப்பெரும் சினிமா நட்சத்திரமாக உருவாக்கக் கனவு கண்டார்.
அதன்படியே, மகள் ஜான்வியின் முதல் பாலிவுட் படமான ‘தடக்’ உருவாகி வந்தது. ஆனால், தன் மகளை வெள்ளித்திரையில் காண காத்திருந்த ஸ்ரீதேவி படம் வெளியாவதற்கு முன்னரே மறைந்தார்.
தற்போது ஜான்வி கபூரின் ‘தடக்’ திரைப்படம் வருகிற ஜூலை 20-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் படத்தின் புரொமோஷன் வேளையில் பிஸியாக இருக்கும் ஜான்வி தன் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.
வெளியிட்ட அடுத்த நொடியிலிருந்து ரசிகர்கள் பலர் ஜான்வி மூலம் ஸ்ரீதேவியைப் பார்க்கிறோம் என உருக அப்புகைப்படம் தற்போது இன்ஸ்டா வைரல் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது.