குகைக்குள் ஒரு வாரத்துக்கும் மேலாகத் தவிக்கும் சிறுவர்கள்!
தாய்லாந்து நாட்டில் 9 நாட்களாகக் குகைக்குள் சிக்கித் தவித்த 12 சிறுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி சிறுவர்கள் நிறைந்த ஒரு கால்பந்து அணி, தங்களது பயிற்சியாளருடன் தாய்லாந்தில் இருக்கும் சியாங் ராய் பகுதியில் உள்ள தம் லுவாங் குகைக்குச் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக குகைக்குள் அவர்கள் அனைவரும் மாட்டிக் கொண்டுள்ளனர்.
தாய்லாந்தில் ஜூலை மாதங்களில் அடை மழை பெய்யும். இந்த நேரத்தில் தம் லுவாங் குகைக்குள் செல்வது பாதுகாப்பனதல்ல என்று கூறப்படுகிறது. ஆனால், கால்பந்து குழுவினர் மாட்டிக்கொண்டனர்.
சிறுவர்கள் அனைவரும் பதின் பருவத்தினர். இந்த விவகாரம் தாய்லாந்தில் மட்டுமல்ல உலக அளவில் கவனம் பெற்றது. பல நாட்டு அரசுகளும் சிறுவர்களை மீட்க நிபுணர்களை அனுப்பி வைத்தது. இதில் சிலர், சிறுவர்களை கண்டுபிடிக்கவே பல வாரங்கள் ஆகும் என்றெல்லாம் கூறினர்.
இந்நிலையில், தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த இங்கிலாந்து நாட்டினர் நேற்று சிறுவர்கள் இருக்கும் குகையை கண்டுபிடித்தனர். அவர்களில் ஒருவர் சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்துள்ளார். வீடியோவில் சிறுவர்கள் கால்பந்து வீரர்கள் அணிவது போன்ற உடைகளை அணிந்திருந்தனர். எல்லோரும் மிகவும் சோர்வாகவும் காணப்பட்டனர். சிறுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அவர்கள் அனைவரையும் குகைக்கு வெளியே கொண்டு வருவது சவாலான விஷயம் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது.