சட்டப்பேரவைக்கு விசிட் அடித்த உதயநிதி
தமிழக சட்டப்பேரவைக்கு திடீரென வருகை தந்த நடிகர் உதயநிதி, அவரது நண்பரின் பேச்சை ரசித்து கேட்டார்.
சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடக்கும்போது, துறை வாரியாக சம்பந்தபட்ட அமைச்சர்கள் பதிலுரை அளிப்பார்கள். அதனை பார்க்க, அமைச்சர்களின் குடும்பத்தினர் வருகை தருவது வழக்கம்.
இன்றைய தினம் போக்குவரத்து துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. இதில், திமுக உறுப்பினர் அன்பில் மகேஷ் பேசினார். அவர், பேச்சை துவக்குவதற்கு முன், திடீரென உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலகம் வந்தார்.
நேராக, சட்டப்பேரவை மாடத்திற்குச் சென்று அமர்ந்து, அன்பில் மகேஷ் பேச்சை முழுமையாக ரசித்து கேட்டார். அப்போது, அவரது தந்தையும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலினும், அவையில் இருந்தார்.
அன்பில் மகேஷ், கல கலப்புடனும், பல்வேறு புள்ளி விவரங்களுடன் அரைமணி நேரத்திற்கும் மேலாக பேசினார். அவர் பேச்சை முடிக்கும் வரை, பேரவை மாடத்தில் அமர்ந்து கவனித்த உதயநிதி ஸ்டாலின், அதன்பின் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
ஏற்கனவே, அரசியல் நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்று வரும் உதயநிதி, திடீரென தலைமைச்செயலகத்திற்கு வந்து, பேரவை நிகழ்ச்சிகளை பார்வையிட்டது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.