நீதிமன்ற உத்தரவை மீறி 2-ஆம் வகுப்பு குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம்

உயர் நீதிமன்றம் உத்தரவை மீறி 2-ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் இருப்பதாக சென்னை உயர் நீதிமன்ற வேதனை தெரிவித்துள்ளது.

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் வழங்கும் புத்தகங்களை மட்டுமே தனியார் சிபிஎஸ்இ பள்ளிகள் பயன்படுத்த உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் புருஷோத்தமன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்க கூடாது என கடந்த மே மாதம் உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மொத்த குளறுபடிக்கும் சிபிஎஸ்இ தான் காரணம் எனவும், விதிகள் எப்படி மீறப்படுகின்றன என்பது குறித்து ரகசிய நடவடிக்கை (sting operation) மூலம் பதிவு செய்துள்ளதாகவும், பிறகு அதை தாக்கல் செய்வதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

வாதங்களை கேட்ட நீதிபதி, உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தாலும், இன்னும் குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் இருப்பதாக வேதனை தெரிவித்தார்.

More News >>