ஜெயலலிதா மரணம்... பின்வாங்கும் மருத்துவர்களால் சிக்கல்
அரசு அனுமதி அளித்துள்ள போதிலும், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் குழுவில் இடம்பெற மருத்துவர்கள் தயக்கம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், அப்போலோ மருத்துவமனை சார்பில் 1000க்கும் மேற்பட்ட பக்கங்களை 30 தொகுப்புகளாக ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை தொடர்பான மருத்துவ அறிக்கை சமர்பிக்கப்பட்டது.
இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர்களிடம் விசாரணை செய்யவும், மருத்துவ அறிக்கை விவரங்களை தெரிந்து கொள்ள மருத்துவ குழு அமைத்து தர அரசிடம் ஆணையம் அனுமதி கேட்டிருந்தது.
இதற்கான அனுமதி அரசு வழங்கிய நிலையில், நான்கு சிறப்பு மருத்துவர்களை நியமிக்கும் பணியில் ஆறுமுகசாமி ஆணையம் இறங்கியது.
தமிழகத்தில் உள்ள சிறந்த மருத்துவர்களை ஆணையம் தரப்பில் அணுகிய போதிலும், இந்த குழுவில் இடம் பெற அந்த மருத்துவர்கள் யாரும் விருப்பம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் அடுத்த கட்ட விசாரணையை மேற்கொள்வதில் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தக்கட்ட முயற்சியாக பிற மாநிலங்களில் இருந்து மருத்துவர்களை அழைக்கும் முயற்சியில் ஆணையம் இறங்கியுள்ளதாக தெரிகிறது.