காவல்துறையினருக்கு வார விடுப்பு... நீதிமன்றம் கேள்வி
காவல்துறையினருக்கு ஏன் வார விடுப்பு வழங்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழக காவல்துறையினருக்கு குறைதீர் ஆணையம் அமைப்பது குறித்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், குழு அமைப்பது தொடர்பாக டிஜிபி தரப்பில் ஏற்கனவே மனுத்தாக்கல் செய்துள்ளதாக கூறினார்.
இது குறித்து உள்துறை செயலாளர் பதில் மனுத்தாக்கல் செய்ய, அவகாசம் வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, தற்போது காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தும் சம்பவம் அதிகரித்து விட்டதாக வேதனை தெரிவித்தார்.
மேலும், இடைவிடாது பணியாற்றி வரும் காவல்துறையினருக்கு ஏன் வார விடுப்பு வழங்கக் கூடாது என கேள்வி எழுப்பினார்.
வார விடுப்பு வழங்குவது குறித்து பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்திற்கு நீதிபதி கிருபாகரன் ஒத்தி வைத்தார்.