சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கு- தலைமை நீதிபதி விசாரிப்பாரா?
சசிகலாவுக்கு எதிரான சொத்து வரி வழக்கை விசாரிக்க மறுத்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், வழக்கை தலைமை நீதிபதி விசாரிக்கவும் சிபாரிசு செய்துள்ளனர்.
கடந்த 1996- 97 ஆம் ஆண்டு சசிகலா பேரில் இருந்த சொத்துகளுக்கு அவர் சரிவர வரி செலுத்தவில்லை என்று வருமான வரித் துறை குற்றம் சாட்டியது. இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 2001 ஆம் ஆண்டில் சசிகலா மீது வருமான வரித் துறை வழக்கு தொடர்ந்தது.
அப்போது, 4.97 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கு சசிகலா 10.13 லட்சம் ரூபாய் வரி செலுத்த வேண்டும் என்று வருமான வரித் துறை சார்பில் கூறப்பட்டது. இதை எதிர்த்து சசிகலா, சொத்து வரி கமிஷனர் முன்னிலையில் மனு கொடுத்தார். அவரது மனு நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து தான், வரியை வாங்குவதற்கு ஏதுவாக வருமான வரித் துறை உயர் நீதிமன்றத்துக்குச் சென்றது. இந்த வழக்கு தற்போது, நீதிபதிக் எஸ்.மணிகுமார் மற்றும் சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ஆனால், அவர்கள் வழக்கை விசாரிக்க மறுத்துவிட்டனர்.
காரணம் சுப்ரமணியம் பிரசாத், வழக்கறிஞராக இருந்த போது, சசிகலாவுக்காக பல வழக்குகளில் வாதாடியுள்ளார். எனவே, இந்த வழக்கை அவர் தலைமையிலான நீதிமன்ற அமர்வு விசாரிக்க முடியாது என்று சொல்லப்பட்டது. மேலும், இந்த வழக்கை தலைமை நீதிபதி விசாரிக்கவும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.