கலிபோர்னியா - பிரேக் டெஸ்ட்டை ரத்து செய்தது டெஸ்லா கார் நிறுவனம்
டெஸ்லா (Tesla) கார் தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலன் மஸ்க், பிரேக் அண்ட் ரோல் (brake-and-roll) எனப்படும் இறுதி கட்ட பரிசோதனையை ரத்து செய்யும்படி தொழிற்சாலை எஞ்ஜினியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்காவில் கலிபோர்னியா, ஃப்ரீமாண்ட்டில் டெஸ்லா கார் தயாரிப்பு நிறுவனத்தின் தொழிற்சாலை இயங்கி வருகிறது. புதிதாக தயாரிக்கப்படும் கார்களுக்கு 'பிரேக் அண்ட் ரோல்' என்பது அத்தியாவசியமான சோதனை ஆகும்.
பாகங்கள் சரியாக இயங்குகிறதா? சக்கரங்கள் சரியாக பொருத்தப்பட்டுள்ளனவா? என்பது உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டே கார்கள் விற்பனைக்காக அனுப்பப்படும்.
டெஸ்லா மாடல் 3 வகை கார்களின் உற்பத்தி இலக்கினை எட்டுவதற்காக, பிரேக் அண்ட் ரோல் சோதனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
டெஸ்லா நிறுவனம் தனக்குத்தானே 5,000 கார்களை உற்பத்தி செய்ய வேண்டுமென இலக்கு நிர்ணயித்துள்ளதாக தெரிகிறது. அதை எட்டுவதற்காக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த டெஸ்லா நிறுவன பிரதிநிதி டேவ் அர்னால்டு, “பிரேக் உட்பட அனைத்து சோதனைகளும் செய்யப்பட்டே வாகனங்கள் வெளியே அனுப்பப்படுகின்றன” என்று கூறியுள்ளார்.