சிறுமி கற்சிலையாக மாற வேண்டி பெற்றோர் செய்த பூஜை!
புதுக்கோட்டை அருகே, ஜோதிடர் சொன்னபடி சிறுமி கற்சிலையாக மாறுவாள் என்று நினைத்து அவரது பெற்றோர் பூஜை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே உள்ள அம்மாபட்டினம் கிராமத்தில் இந்த கொடுமை நிகழ்ந்துள்ளது. கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்ட மாசிலா, 12ஆவது பிறந்தநாளில், கற்சிலையாக மாறிவிடுவார் என சிறுமியின் பெற்றோரிடம் ஜோதிடர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதனை நம்பிய சிறுமியின் பெற்றோர், மாசிலா கற்சிலையாக மாறிவிடுவார் என முடிவெடுத்து, அவரது 12-ஆவது பிறந்தநாளில் சிறப்பு பூஜை செய்துள்ளனர். பின்னர் சிறுமியை மணமேல்குடியில் உள்ள வடக்கூர் அம்மன் கோவிலுக்கு அழைத்து வந்தனர். அங்கு மேளதாளங்கள் முழங்க மாசிலாவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சிறுமி கற்சிலையாக மாறப்போகும் செய்தியைக் கேட்டு, கோவில் வளாகத்தில் 500-க்கும் மேற்பட்ட பொது மக்கள் திரண்டனர். ஆனால், சிறுமி கற்சிலையாக மாறவில்லை. இதையடுத்து, நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள் அனைவரும் திரும்பிச் சென்றனர்.
இதனால் மனம் உடைந்த சிறுமியின் குடும்பத்தினர் ஊரையே காலி செய்துவிட்டு வேறு ஊருக்குச் சென்று விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.