தமிழகத்தில் பாஜக பின்தங்கியுள்ளது- முரளிதர ராவ்

தமிழகத்தில் பின்தங்கியுள்ள பாஜகவை மீட்டெடுப்போம் என அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கோவை இந்திய தொழில் வர்தகசபையில் ஜிஎஸ்டி வரி குறித்த தொழில் துறையினரின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், “தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்கவே, எட்டு வழிச்சாலையைக்கு எதிராக போராட்டம் நடக்கிறது. மாநில வளர்ச்சியின் 70 % மேற்கு மாவட்டத்தில் இருந்துதான் பெறப்படுகிறது" என்று கூறினார்.

“கோவையில் வர்த்தகம் பாதிக்காத வகையில் விமான சேவை வழங்க நடவடிக்கை எடுக்க துறை ரீதியிலான பணி நடந்து வருகிறது. மேலும், இராணுவ தளவாடங்கள் தயாரிக்க நிதி ஒதுக்க பட்டு உள்ளது” என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முரளிதர ராவ், “தமிழகத்தில் பாஜக மிகவும் பின்தங்கியுள்ளது. அதை நாங்கள் மீட்டு எடுப்போம். வரும் தேர்தல்களில் பல இடங்களில் வெற்றி பெறுவோம். கோவையை பொறுத்தவரை பாஜக பலமாக உள்ளது" என நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழகத்தில் தலைமை சரி இல்லை என்ற கேள்விக்கு ஆவேசமாக பதிலளித்த முரளிதரராவ், "கட்சி உள் விவகாரம் குறித்து பதிலளிக்க முடியாது. எங்களது கட்சி விவகாரத்தை நாங்கள் பார்த்து கொள்வோம்" என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

More News >>