அழைப்பிதழ் கொடுப்பதுபோல் வந்து நூதன திருட்டு
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே திருமண அழைப்பிதழ் கொடுப்பது போல் வந்து ஹார்டுவேர்ஸ் கடை உரிமையாளரின் மனைவியை கட்டிப்போட்டு நகை கொள்ளையடிக்கப்பட்டது.
திருச்சி மாவட்டம் காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த அந்தோணிமுத்துதுரை திருவெறும்பூரில் மின்சாதன உதிரி பாகங்கள் கடை நடத்தி வருகிறார். இன்று இவர் கடைக்கு சென்ற பிறகு, அவரது மனைவி செல்வராணி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அப்போது, வீட்டிற்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்திருப்பதாகக் கூறியுள்ளனர். யார் நீங்கள் என்று செல்வராணி கேட்டதற்கு, அவரது தாயாரின் பெயரை குறிப்பிட்டு உறவினர்கள் என்று கூறியுள்ளனர்.
அவர்களை அழைத்து உள்ளே உட்கார வைத்துவிட்டு, தேநீர் போடுவதற்காக செல்வராணி சமையலறைக்கு சென்றுள்ளார். அவரின் பின்னே சென்ற அந்த கும்பல், வீட்டில் செல்வராணி தனியாக இருப்பதை நோட்டம் விட்டுள்ளனர்.
பின்னர், அந்த கும்பல் செல்வராணியை தாக்கி, கை கால்களை கட்டிப்போட்டு, ஒரு அறைக்குள் தள்ளியுள்ளனர். அத்துடன், அவர் அணிந்திருந்த 13 சவரன் நகையை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றது.
மயக்கம் தெளிந்த பிறகு செல்வராணி, அவரது கணவர் அந்தோணிமுத்துதுரையை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடந்தவற்றை எடுத்து கூறியுள்ளார். இது குறித்து அந்தோணிமுத்துதுரை அளித்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.