பையில் பாம்பு இருப்பது அறியாமல் பள்ளிக்கு சென்ற மாணவன் அதிர்ச்சி

பையில் பாம்பு இருப்பது தெரியாமல் பள்ளிக்கு சென்ற மாணவன் அங்கு பையை திறந்து பார்த்ததும் பயத்தில் ஓட்டம்பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா எல்லையில் அமைந்துள்ள கிருஷ்ணகிரி மாவட்டம் காமராஜநகர் பகுதியை சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் மாணவன், கடந்த திங்கட்கிழமை வழக்கம்போல் பள்ளிக்கு தயாராகிக் கொண்டிருந்தான்.

புத்தகப்பை எடுத்து தனது தோளில் மாட்டிக் கொண்ட மாணவன் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்கு புறப்பட்டான். பள்ளியை சென்றடைந்து வகுப்பு ஆரம்பிக்கும்போது தான் மாணவனுக்கு அந்த அதிர்ச்சி காத்திருந்தது.

தனது பையில் இருந்த புத்தகத்தை எடுக்க திறந்து பார்த்தபோது புத்தகங்களின் நடுவில் நாகப்பாம்பு ஓன்று இருந்ததை கண்டு மாணவன் அதிர்ச்சியடைந்தான். பாம்பை பார்த்த பயத்தில் புத்தகப் பையை வீசியடித்த மாணவன் அங்கிருந்து அலறியடித்து ஓட்டம்பிடித்தான்.இதுகுறித்து, பள்ளி ஆசிரியருக்கு தெரியவந்ததை அடுத்து, போலீஸ் உதவியுடன் பாம்பை அப்புறப்படுத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், “நல்ல வேளையாக மாணவன் முதலில் பையை திறந்து பார்த்துள்ளான். பார்க்காமல் புத்தகம் எடுக்க கையைவிட்டிருந்தால் அபாய நிலைக்கு மாணவன் தள்ளப்பட்டிருப்பான். பையில் பாம்பு இருப்பது தெரியாமலேயே 1 கி.மீ., சுமந்தபடி பள்ளிக்கு வந்தது தான் ஆச்சரியம்” என்றார்.

கடந்த வெள்ளிக்கிழமை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததும் பையை வீட்டின் ஒரு ஓரத்தில் வைத்திருந்தேன். அத்துடன் இன்று காலை தான் அந்த பையை எடுத்துக் கொண்டு வந்தேன். இதற்கிடையே, பையை நான் திறந்து பார்க்கவில்லை என்று மாணவன் தனது ஆசிரியர்களிடம் தெரிவித்துள்ளான்.

More News >>