தீபாவளி முன்னிட்டு ரயில் முன்பதிவு தொடங்கி சில நிமிடங்களில் முடிந்தது
தீபாவளி பண்டிகைக்கான ரயில் முன்பதிவு இன்று தொடங்கிய நிலையில், சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன.
தீபாவளி பண்டிகை இன்னும் மூன்று மாதங்களில் கொண்டாடப்பட இருக்கிறது. இதனால், வெளி மாவட்டங்களில் வசிக்கும் பொது மக்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று தீபாவளி பண்டிகையை கொண்டாடுவார்கள். இதனால், தென் மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சிறப்பு ரயில்களில் முன்கூட்டியே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிடும் என்பதால், பொது மக்களின் வசதியை கருத்தில் கொண்டு 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.
இதற்கான, முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தீபாவளி நாளான நவம்பர் 2ம் தேதி பயணம் செய்யும் பயணிகள் இன்று முதல் முன்பதிவு செய்து வருகின்றனர். இதனால், சென்ட்ரல், எழும்பூர் உள்பட பல ரயில் நிலையங்களில் இன்று அதிகாலை முதலே பயணிகள் காத்திருந்து டிக்கெட்டுகளை பெற்று சென்றனர். முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் அனைத்து ரயில்களிலும் நவம்பர் 2ம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு முடிந்தது.
இதேபோல், நவம்பர் 3ம் தேதி பயணம் செய்ய இருப்பவர்கள் நாளையும், நவம்பர் 4ம் தேதி பயணம் செய்ய இருப்பவர்கள் ஜூலை 7ம் தேதியும் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.