விழுப்புரத்தில் நடத்துநர் இல்லா பேருந்து சேவை அறிமுகம்nbsp
விழுப்புரம்- சென்னை இடையே அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நடத்துநர் இல்லாத, இடைநில்லா பேருந்து வசதி பயணிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
விழுப்புரத்தில் இருந்து 155 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சென்னைக்கு முதல் முறையாக இடைநில்லா பேருந்து வசதி தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரைமணி நேர பயண நேரம் குறையும் எனக் கூறப்படுகிறது.
இந்த சேவைக்கு புதிதாக வாங்கப்பட்ட 8 நவீன அரசு பேருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. விழுப்புரத்தில் இருந்து கோயம்பேடு செல்ல ஒரே கட்டணமாக 150 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. விழுப்புரத்தில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு, சென்னை கோயம்பேட்டை வந்தடையும். அதே பேருந்து சென்னை கோயம்பேட்டில் இருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் சென்றடையும். இரு வழித்தடத்தில் ஒரு மணி நேரத்தில் தலா ஒரு பேருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த சேவைக்கு விழுப்புரம் பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஒரு மணி நேரத்திற்கு 2 பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.